adsமழலையர், பெரியோருக்கான விளையாட்டுப் போட்டிகள், களறி விருந்துடன் நடந்தேறியது பெங்களூரு காயல் நல மன்றப் பொதுக்குழு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும் பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சிகள், மழலையர் - பெரியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் & களறி விருந்துடன் நடைபெற்றுள்ளது. காயலர்கள் இதில் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை :-
KWAB.jpg
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்... 

எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & காயலர் குடும்ப சங்கம 4ஆவது நிகழ்ச்சிகள், பெங்களூரு தேவனஹல்லியிலுள்ள ஆடிட்டர் புகாரீ ஃபார்ம் ஹவுஸ் தோட்டத்தில், 10.12.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றன. 
2_1.jpg
மேலதிக புகைப்படங்களை காண இப்படத்தை கிளிக் செய்யவும். 
முன்னேற்பாடுகள் : 

பல நாட்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு, சுமார் ஒரு மாத கால ஏற்பாட்டுப் பணிகளையடுத்து இப்பொதுக்குழுக் கூட்டமும், குடும்ப சங்கம நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. நிகழ்வு நாளுக்கு முந்திய நாளான சனிக்கிழமையன்று, மன்ற நிர்வாகிகளின் வழிகாட்டலில், தன்னார்வ இளைஞர் குழு, பெங்களூரு நகரிலிருந்து சுமார் 1 மணி நேர வாகனப் பயணத் தொலைவிலுள்ள இத்தோட்டத்திலேயே முகாமிட்டு, இரவு நேரக் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஏற்பாட்டுப் பணிகளைச் சிரமேற்கொண்டு செய்திருந்தது. 

காயலர் ஒன்றுகூடல் : 

நிகழ்வு நாளான 10.12.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 08.00 மணி துவங்கி, 10.00 மணி வரை - மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர். நாற்சக்கர வாகனம் வைத்திருந்தோர் தம் குடும்பத்தினருடன் நிகழ்விடம் வந்தனர். வாகனம் வைத்திராத உறுப்பினர்களுக்காக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேன் வாகனத்தில் இதர உறுப்பினர்கள் வந்து சேர்ந்தனர். 

குளியல் & காலைச் சிற்றுண்டி : 

முற்றிலும் மரங்கள் அடர்ந்து சோலைவனமாகக் காட்சியளிக்கும் இத்தோட்டத்தில், தங்கும் வீட்டின் மாடியிலேயே பலர் குளிக்கும் வகையில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. நெடுந்தொலைவிலிருந்து வந்து சேர்ந்ததால் அலுப்பிலிருந்த பலர், வந்த வேகத்தில் குளியல் தொட்டிக்குள் விழுந்து இன்பக் குளியல் நடத்தினர். கட்டிடத்தின் தென்புறத்தில், ஏழிலைக் கிழங்கு பகுடு பதார்த்தத்துடன் சுவையான இஞ்சி தேனீர் வரவேற்புப் பதார்த்தமாகவும், சுவையான சிக்கன் சேமியா காலை உணவாகவும் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. மறுபுறத்தில், மதிய உணவு ஆயத்தம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

மன்றத் தலைவர் ‘ஹனீவெல்’ இப்றாஹீம் தலைமையுரையாற்றினார். இதுநாள் வரை மன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள நகர்நலத் திட்டப் பணிகள், நிர்வாகப் பணிகள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் அவரது உரையில் இடம்பெற்றன. மன்றப் பொருளாளர் வாவு – மன்றத்தின் கடந்த ஓராண்டு வரவு – செலவு கணக்கறிக்கையைச் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது. 

ஏற்கனவே, கல்விக்காகவும் – வேலைவாய்ப்பு தேடியும் பெங்களூரு வரும் காயலர்கள் தங்குவதற்காக விடுதி ஏற்பாட்டை மன்றத்திற்காகச் செய்தளித்த மன்றத் துணைத்தலைவர் அப்துர்ரஹ்மான் புகாரீ, மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தான் புதிதாகச் செய்துள்ள இட ஏற்பாடு குறித்து இக்கூட்டத்தில் விளக்கிப் பேசினார்.

உலக காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைப்புடன் - ஷிஃபா அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வரும் மக்கள் மருந்தகத்தின் தற்காலச் செயல்பாடுகள் குறித்தும், பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் – முன்னிலை வகித்த – சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினரும் – மக்கள் மருந்தக நிர்வாகியுமான சாளை நவாஸ் விளக்கிப் பேசினார். இக்கூட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொண்ட – துளிர் அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் எச்.எம்.அஹ்மத், துளிரின் சேவைகள் குறித்தும், எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

உடல் நல கருத்தரங்கம் : 

இந்நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, உடல் நல கருத்தரங்கம் துவங்கியது. மன்றத்தின் உறுப்பினரும், முடநீக்கியல் நிபுணருமான ஹாஃபிழ் எம்.டீ.யாஸர் அரஃபாத் – முடநீக்கியல் (ஃபிஸியோதெரபி) துணையில் தான் அளித்த சிகிச்சை, அதனால் நோயாளிகள் பெற்ற பலன் குறித்து விவரித்ததோடு, எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.

சிறப்பு விருந்தினர்கள் உரை : 

இக்கூட்டத்தில், “இயல்வழி மருந்தில்லா மருத்துவக் குழும” நிர்வாகிகளான எஸ்.கே.ஸாலிஹ் (நிறுவனர்: தாருத்திப்யான் நெட்வர்க்), அக்குஹீலர் சக்தி பகதூர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அவர்களது உரைச் சுருக்கம் வருமாறு:- 

எஸ்.கே.ஸாலிஹ் : 

நமது பெங்களூரு காயல் நல மன்றத்தால், இங்கு கல்வி - வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக வருவோர் தம் தேவை நிறைவேறும் வரை தங்கிட மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி இல்லத்தாரின் உதவியில் விடுதியை ஏற்பாடு செய்து தந்து சில ஆண்டுகளாகியும், அதன் பயன்பாடு எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாகவே உள்ளதாக துணைத்தலைவர் இங்கே குறிப்பிட்டிருந்தார். இது, “கரும்பு தின்னக் கூலியா?” என்று கேட்பது போல உள்ளது. ஒருபுறம் இதுபோன்ற சேவைகளை யாராவது செய்து தர மாட்டார்களா என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும் நிறைந்திருக்க – மறுபுறம் இங்கோ – தரப்பட்ட சேவையைப் பயன்படுத்த யாருமில்லையா என கூவிக்கூவி அழைக்கும் நிலையுள்ளதை அறிய வேதனையாக உள்ளது. இனி வருங்காலங்களிலேனும் இந்நிலை மாற வேண்டும். 

வெளிநாடுகளில் கிடைக்கும் ஊதியம் வேண்டுமானால் கண்ணுக்குப் பெரிதாகத் தெரியலாம். ஆனால் அங்கு ஏற்படும் செலவினங்களைக் கழித்துப் பார்க்கையில், கையில் எஞ்சும் தொகை, உள்நாட்டில் ஈட்டுவதைப் போலத்தான் உள்ளது என்பதை அறியும்போது, இவ்வளவு அவதிகள் தேவைதானா என்று நினைக்கத் தோன்றுகிறது. 

எனவே, வெளிநாடுகளில் பல்லாண்டு காலமாகப் பணியாற்றி பலரும் கூட இன்று தாயகத்தை நாடி வந்துகொண்டிருக்கையில், இன்றளவும் மாணவர்கள் பலர் எட்டாத வாய்ப்புகளை எதிர்பார்த்து வெளிநாடுகளுக்குப் படையெடுப்பதை விட, இதுபோன்ற நகரங்களில் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதே சிறந்தது என்று கருதுகிறேன். 

கடந்தாண்டு, உடல் நலன் குறித்து சில கருத்துக்களை இங்கே பதிவு செய்தேன். அதன் வழி நின்று சில கூடுதல் தகவல்களை மட்டும் உங்கள் முன் பகிர ஆவல் கொள்கிறேன்... மனித உடல் ஒருபோதும் தவறிழைக்காது. உடலில் ஏற்படும் காய்ச்சல், இருமல், சளி, தடுமல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அனைத்துமே – உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை உடலுக்குள் இருக்கும் மருத்துவர் தானாகவே வெளியேற்ற முனைவதன் அடையாளங்களே ஆகும். எனவே, இந்த அடையாளங்களை நோய் என்று கருதாமல், கழிவை வெளியேற்றும் காரணிகள் என்று சரியாகப் புரிந்துகொண்டால், மருந்து எனும் பெயரில் எதையும் உடலுக்குள் செலுத்த மாட்டோம். 

அதுபோல, இந்த நவீன உலகில் எடுத்ததற்கெல்லாம் கருவிகளை நாடும் நிலையுள்ளது. இதன் காரணமாக, மனிதன் இத்தனைக் காலமாக உடலை இயக்கிச் செய்து வந்த பல வேலைகள் இன்று உடல் சிறிதளவும் இயங்காத நிலையிலேயே செய்யப்பட்டு வருகிறது. எனவே, பசியைக் கூட உணராமல் அவன் நேரம் பார்த்து உண்ணும் உணவுகள் அனைத்தும் சத்துகளாக மாற்றப்படுவதற்குப் பகரமாக, கழிவுகளாக உடலிலேயே தேக்கமடைகிறது. அவ்வாறு தேங்கும் கழிவுகள் – தேக்கத்தின் கால அளவைப் பொருத்து வெவ்வேறு வகையில் உருமாற்றம் கண்டு, உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கிறது. இதனைத் தவிர்க்க, இயன்றளவுக்கு உடலை இயக்கி மீண்டும் நாம் நம் வேலைகளைச் செய்தாலே போதுமானது. 

இவ்வாறு அவரது உரை அமைந்திருந்தது. 

‘அக்குஹீலர்’ சக்தி பகதூர் : 

தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் ‘அக்குஹீலர்’ சக்தி பகதூர் உரையாற்றினார். இன்று உலகில் நாகரிகம் வளர வளர, மனிதன் செயற்கை முறையிலான வாழ்வியலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வருகிறான். இயற்கையான உணவுப் பதார்த்தங்கள் இன்று மங்கிப்போய், உறைகளில் அடைக்கப்பட்ட - வேதிப் பொருட்களால் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவே முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

கொஞ்சம் சாப்பிட்டாலும், தமது உடலியக்கத்தால் ஓரளவுக்கேனும் வியர்வையைச் சிந்தியவர்கள், இன்று மின் விசிறிகளின் அடியிலும், ஏசியால் குளிரூட்டப்பட்ட அறைகளிலும் தஞ்சமடைவதால், உலகின் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, மரம் (வானம்) உள்ளிட்ட எதுவுமே அவர்களின் மேனியில் படுவதில்லை. உடலின் பசி, தாகம், உறக்கம், ஓய்வு ஆகியவற்றைக் கவனித்து - உடலின் மொழியறிந்து செயல்பட்டால் எல்லாப் பிணிகளும் இல்லாமல் போகும். உடலில் தேங்கும் கழிவுகளே நோய்கள். எனவே, அக்கழிவுகள் நீக்கப்பட்டால் உடல் நலன் பாதுகாக்கப்படும். 

உடற்கழிவுகள் - மலம், சிறுநீர், வியர்வை, சளி உள்ளிட்டவற்றின் வழியே அடிப்படையாக வெளியேற்றப்படுகிறது. ஆனால், நாம் ஒரு வேளை சாப்பிட்ட பின், அடுத்த வேளை பசிக்காத நிலையிலும் - கடிகாரத்தைப் பார்த்து சாப்பாட்டு நேரத்தைக் கணக்கிட்டு உண்கிறோம். பசிக்காத நிலையில் சாப்பிட்டதால், ஏற்கனவே சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல், உடலில் கழிவாகத் தேங்குகிறது. அக்கழிவுகள் பிற்காலத்தில் பல்வேறு நோய்களை உடலில் வெளிப்படுத்தி, உடல் நலனைக் கெடுக்கிறது. 

இதைத் தவிர்க்க, 

பசியெடுத்தால் மட்டுமே சாப்பிடுவேன்! பசிக்காமல் சாப்பிட மாட்டேன்!! 

தாகித்தால் மட்டுமே தண்ணீர் குடிப்பேன்! தாகமின்றி நீரருந்த மாட்டேன்!! 

எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்குவேன்! உடலுக்கு ஓய்வு தேவைப்பட்டால் வேலையை நிறுத்தி ஓய்வெடுப்பேன்!! 

கண்ட நேரத்திலும் உறங்க மாட்டேன்! உறக்கம் வந்தால் உடனேயே உறங்கிவிடுவேன்!! 

என்ற நிலைப்பாட்டை மனதில் அழுத்தமாக ஏற்றி, வாழ்வில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால், உடல் நலன், மன நலன் இரண்டும் நன்றாகப் பாதுகாக்கப்படும். 

படுத்தவுடன் உறக்கம் வந்தால் மனம் நலமுடன் இருக்கிறது என்றும், கழிப்பறை சென்றவுடன் சிரமமின்றி மலம் வெளியேறினால் உடல் நலமுடன் இருக்கிறது என்றும் அறிந்துகொள்ளலாம். 

இவ்வாறு அவரது உரை அமைந்திருந்தது. உரையைத் தொடர்ந்து, பங்கேற்றோர் எழுப்பிய – உடல் நலன் தொடர்பான பல கேள்விகளுக்கும் அவர் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்தார். நிறைவில், தேவைப்பட்டோருக்கு அவர் அக்குபங்சர் சிகிச்சையும் அளித்தார்.நினைவுப் பரிசுகள்: 

மேடையில் முன்னிலை வகித்தோர், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் - அதன் நிர்வாகிகளால் நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது. 

கடந்த 15.10.2017. அன்று, கத்தர் காயல் நல மன்றம், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு ஆகிய அமைப்புகளுடன் பெங்களூரு காயல் நல மன்றமும் இணைந்து நடத்திய அரபு வனப்பெழுத்து வரைகலை (Arabic Calligraphy) நிகழ்ச்சிக்கான அடிப்படை ஏற்பாடுகளை – மன்றத்தின் சார்பில், துவக்கம் முதல் – தேவைப்பட்ட அனைத்து நேரங்களிலும் இணைந்து செய்த ஹாஃபிழ் ஷேக் அப்துல்லாஹ் முஹாஜிருடைய சேவையைப் பாராட்டி, இக்கூட்டத்தின்போது சிறப்பு நினைவுப் பரிசு அளித்து கண்ணியப்படுத்தப்பட்டது. 

மன்றத்தின் முன்னாள் தலைவரும், நடப்பு ஆலோசகருமான பீ.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் நன்றி கூற, துஆவுடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. 

மீண்டும் குளியல் : 

மதிய உணவு ஆயத்தமாக உள்ளதாகவும், குளியல் - ளுஹ்ர் தொழுகையை நிறைவேற்றிய பின் அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்படவுள்ளதாகவும், இடைப்பட்ட நேரத்தில் மகளிருக்கு விருந்துபசரிப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆண்கள் அனைவரும் குளியல் தொட்டிக்குள் இறங்கி, நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர். 

ளுஹ்ர் தொழுகை : 

குளியலை முடித்துக்கொண்டு, அனைவரும் ளுஹ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றினர். 

மதிய உணவு விருந்துபசரிப்பு : 

இப்பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் ஊரிலிருக்கும் மகிழ்ச்சியை அளிப்பதற்காக, காயல்பட்டினத்திலிருந்து சமையல் கலைஞர் முத்துவாப்பா தொடர்ந்து இரண்டாமாண்டாக வரவழைக்கப்பட்டிருந்தார். 

அவரது தனித்திறனுடன் கூடிய கைவண்ணத்தில், காலை உணவாக சிக்கன் சேமியா, மதிய உணவாக காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு ஆகியவற்றையும், காயல்பட்டினத்தின் இஞ்சி தேனீரையும் அவர் ஊரின் சுவை மாறாது நிறைவாக அவர் தயாரித்திருந்தது, பங்கேற்ற அனைவருக்கும் - குறிப்பாக மகளிருக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது. ஸஹன் முறையிலும், தனித்தட்டுக்களிலும் அனைவரும் மதிய உணவுண்டனர்.

மழலையர், பெரியோருக்கான பல்சுவைப் போட்டிகள் : 

தொடர்ந்து மழலையருக்கான பல்சுவைப் போட்டிகள் நடத்தப்பட்டது. அவையில் முன்னிலை வகித்த கவிஞர் ஜாஹிர் ஹுஸைன் அழகிய இறைத்துதிப் பாடல்களைப் பாடி இவ்வமர்வைத் துவக்கி வைத்தார். துவக்கமாக திருக்குர்ஆனின் சிறு அத்தியாயங்களை அழகுற ஓதும் போட்டி நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினர் எஸ்.கே.ஸாலிஹ் இப்போட்டியை நடத்தினார். 

தொடர்ந்து, மழலையருக்கான பலூன் உடைக்கும் போட்டி, எலுமிச்சம்பழத்தைத் தாங்கிய கரண்டியை – பழம் கீழே விழாமல் எடுத்துச் செல்லும் ஓட்டப் போட்டி, நினைவாற்றல் போட்டி என பல போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றை, பெங்களூரு காயல் நல மன்றத்தின் ‘கேம் அங்கிள்’ வாவு ஷாஹுல் ஹமீத் ஒருங்கிணைத்து நடத்தினார்.

இப்போட்டியின்போது ஒன்று சிரிக்க, ஒன்று அழ, ஒன்று சுட்டித்தனம் செய்ய, ஒன்று கோபத்தை வெளிப்படுத்த என வெவ்வேறு குணங்களுடனான அவர்களது நடவடிக்கைகள் அனைவரது கண்களுக்கும் விருந்தளித்தன. 

இப்போட்டிகளைப் பார்த்து, ஆர்வமுடன் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்ட சிறப்பு விருந்தினர் ‘அக்குஹீலர்’ சக்தி பகதூர், தன் பங்குக்கு – மழலையருக்கான கவனத்திறன் போட்டி ஒன்றை நடத்தி மகிழ்வித்தார்.

அதனைத் தொடர்ந்து, மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இசைப் பந்து (Musical Ball) போட்டி நடத்தப்பட்டது. கடைசி வரை நின்று வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற முனைப்புடன் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கையில், தன் கையில் பந்து இருக்கும் நேரம் பார்த்து இசையை நிறுத்திய ஒருங்கிணைப்பாளரைச் செல்லமாகக் கடிந்தவாறே அவர்கள் ஒவ்வொருவராகப் போட்டியிலிருந்து வெளியேறியது அனைவரையும் ரசிக்க வைத்தது. வெற்றிபெற்றோர் கூட்டத்தில் பாராட்டப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மழலையர், சிறுவர் - சிறுமியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை, மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர். 

அஸ்ர் தொழுகை மற்றும் மாலை சிற்றுண்டி : 

அனைவரும் அஸ்ர் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றினர். அனைவருக்கும் இஞ்சி தேனீர், ஏழிலைக் கிழங்கு பகுடு சிற்றுண்டி வழங்கப்பட்டது. 

மஃரிப் தொழுகை : 

18.30 மணியளவில் மஃரிப் தொழுகையை நிறைவேற்றிய பின், அவரவர் குழுப்படம் எடுத்துக்கொண்டவர்களாக, பிரிய மனமின்றி வசிப்பிடம் திரும்பினர். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கள உதவி : 
உமர் அப்துல் காதிர்

செய்தியாக்கம் : 
எஸ்.கே.ஸாலிஹ்.
21 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top