adsஅபூதபீ கா.ந.மன்ற 11- ஆவது பொதுக்குழு &குடும்ப சங்கம நிகழ்ச்சி உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
AbuDhabiKAWALogo.jpg 
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 11-வது பொதுக்குழு ஒன்றுகூடல் நிகழ்ச்சி நவம்பர் 10 வெள்ளிக்கிழமையன்று, K.F.C. பூங்காவில் சிறப்பான முறையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்குக் காலை செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் அவர்கள் தயாரித்து உதவிய நவதானிய  சுண்டல் மற்றும்  சுவைமிக்க இளநீர் கடற்பாசி வழங்கி உபசரித்து அகமகிழ வரவேற்றனர். வருகைதந்த உறுப்பினர்கள் அனைவரும் வருகை பதிவேட்டில் பதிவு செய்து சந்தா மற்றும் நன்கொடைகள் செலுத்தி கொண்டனர் புதிதாக வந்துள்ளவர்கள் உறுப்பினர் படிவத்தினை நிரப்பி தங்களை இம்மன்றத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்கள். 
 
இலவச மருத்துவ முகாம் :

மன்ற துணைத்தலைவர் S.A.C. ஹமீது அவர்களின் ஒருங்கிணைப்பில் அஹலியா  ( AHLIYA MEDICAL) மருத்துவ குழுமத்தினர் துணையுடன் இலவசமருத்துவ முகாம் நடத்தப்பட்டு பொதுக்குழுவில் கலந்து கொண்ட அநேகமானோர் பயன்பெற்றனர்

பொதுக்குழு கூட்டம் :

மன்றத்தலைவர் ஜனாப் V.S.T. ஷேக்னா லெப்பை,  பொதுச் செயலாளர் எம்.மக்பூல் அஹ்மத் மற்றும் துபை காயல் மன்றத்தலைவர் J.S.A. புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தோஷிபா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்  MJ இக்பால், தோஷிபா நிறுவனத்தின் பொது மேலாளர் VSM அபூபக்கர்,செங்கோட்டை 'அருட்தந்தை' நல்லதம்பி ராஜன்,தமிழ்ச் சங்க தலைவர் திரு ரெஜினால்டு  ஆகியோர்கள் கலந்துகொண்டனர் 

இந்நிகழ்ச்சியை மன்ற செயற்குழு உறுப்பினரான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி. ஹுஸைன் மக்கீ ஆலிம் மஹ்ழரீ அழகான முறையில் தொகுத்து வழங்கினார்கள். இளவல் ஹபீப் ரஷாத் இறை வசனம் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.

வரவேற்பு உரை :

வந்தோர் அனைவரையும் செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் (பாதுல் அஷ்ஹாப் ) அவர்கள் அகமகிழ்வோடு வரவேற்றார்.

மன்றத்தலைவர் உரை :

மன்றத்தலைவர் எஸ்.டி.ஷேக்னா லெப்பை தமதுரையில் மன்றச் செயல்பாடுகளில் மன்றத்தின் நிர்வாக குழு, செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒற்றுமையுடன் கூடிய ஈடுபாட்டைப் பாராட்டியும், ஒற்றுமையின் அவசியம் குறித்து வலியுறுத்தியும் பேசினார் மேலும் அவர் பேசுகையில் 2012 அம ஆண்டு முறைப்படி அபூதபீ காயல் நல மன்றம் என்ற பெயரில் புதியதோர் அமைப்பு துவக்கப்பட்டு இறைவன் அருளால் இதுவரை 35 லட்சம் வரை மன்றத்தின் மூலம் உதவிகள் செய்யப்பட்டதோடு உறுப்பினர்களின் தாராள அனுசரணையாளர்களின் பங்களிப்புகளையும் விளக்கினார் மன்றத்தின் வளர்ச்சி இன்னும் மேன்மை பெற சந்தா தொகையை நிலுவையின்றி செலுத்த வேண்டி உறுப்பினர்களிடம் அன்போடு கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.

மன்ற செயல்பாடுகள் ஆண்டறிக்கை :

மன்றம் இதுவரை ஆற்றிய உதவிகளையும், ஆண்டறிக்கையும் ,மன்றத்தின் செயல்பாடுகளையும் மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மன்ற நடவடிக்கைகள் குறித்து மன்ற பொருளாளர் நோனா அபூஹுரைரா அவர்கள் விரிவாக விளக்கினார். 

சிறப்பழைப்பாளருக்கு பொன்னாடை :- 

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் முறையே மன்றத்தின்தலைவர் வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை, பொதுச் செயலாளர் எம்.மக்பூல் அஹ்மத்,பொருளாளர் ஹுசைன் நூருதீன் செயற்குழு உறுப்பினர்கள் ஹுவைலித் துணி உமர் அன்சாரி, சாலிஹ், டாக்டர் செய்யதுஅஹ்மத் மற்றும் டாக்டர் H.M. ஹமீத் யாசிர் ஆகியோர்கள் சிறப்பழைப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி கண்ணியப்படுத்தினர்.

நினைவுப் பரிசு : 

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தோஷிபா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் MJ இக்பால் அவர்களுக்கு அபூதபீ மன்றத்தின் சார்பாக மன்றத்தின் பொதுச் செயலாளர் எம்.மக்பூல் அஹ்மத் அவர்கள் சிறப்பு நினைவுப் பரிசை வழங்கி கண்ணியப்படுத்தினார்கள் .

சிறப்பு விருந்தினரைப் பற்றி அறிமுக உரை :
 
மன்றத்தின் துணைத்தலைவர் S.A.C. ஹமீது அவர்கள் சிறப்பு விருந்தினர்களைப் பற்றி அறிமுகஉரை தந்ததோடு மன்றத்தின் அழைப்பினை ஏற்று வருகை தந்த அனைத்துச் சிறப்பு அழைப்பாளர்கள் ஒவ்வருவரையும் புகழ்ந்து அவர்கள் ஆற்றி வரும் பொது சேவைகளை உளமார வாழ்த்தி விடை பெற்றார். 

சிறப்பழைப்பாளர் 'அருட்தந்தை' நல்லதம்பி ராஜன் அவர்கள் உரை :

சிறப்பு அழைப்பாளராகச் செங்கோட்டை 'அருட்தந்தை' நல்லதம்பி ராஜன் அவர்களை அழைத்திருந்தோம். முதலில் காயல்பட்டின வாசிகளுக்கு எங்களது உளப்பூர்வமான நன்றிகள் எனத் தொடங்கிய அவர் நம் மண்ணின் மைந்தர் கடையநல்லூர் MLA அபூபக்கரை வெகுவாகப்புகழ்தார். 

செயல் வீரரான உங்களூர் அபூபக்கர் எங்களுர் மக்களோடு மக்களாகக் கலந்து, தனக்கு வாக்களித்த மக்களின் அன்றாட பிரச்சனைகளை அனுதினமும் தீர்வு காணப் போராடுகிறார் எனப் பெருமிதம் கொண்டார். 

அவர் சார்ந்த கட்சியின் சார்பாக, மக்களுக்கு இலவச வீடு கட்டித் தரும் (பைத்துல் ரஹ்மா) அருள்நெறி இல்லத் திட்டத்தின் ஒரு பகுதியாக, எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு ஏழை கிறித்தவருக்கு அவர்கள் வாழ ஒரு இல்லத்தை உருவாக்கி அர்ப்பணித்த போது, அவருக்காக மனமுருகி கர்த்தரிடத்தில் ஜெபித்தோம் இந்த மறக்க முடியாத விஷயத்தை நெஞ்சுருக நன்றியோடு நினைவுகூர்ந்தார். எங்கள் தேவாலயங்களோடு அவர் நெருக்கமான உறவைப் பேணுகிறார், எல்லோரையும் மதித்து நடப்பவராகவும், மிக மிக எளிமையும் பணிவு மிக்கவராகவும் உள்ள அபூபக்கரை நாங்கள் பலப்படுத்துவோம்,தொடர்ந்து ஆதரிப்போம் எனக்கூறிய அவர், MLA அபூபக்கரை பரிசளித்தமைக்காக காயல்பட்டின மக்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்து அமர்ந்தார் . 

சிறப்பழைப்பாளர் தமிழ் சங்க தலைவர் திரு ரெஜினால்டு :
 
திரு ரெஜினால்டு அவர்கள் வழமைபோல் தமக்கும்,காயலர்களோடு உள்ள தொடர்புகள் ,காயலர்கள் உலகம் முழுவதும் அமைப்புகளை ஏற்படுத்தி,ஏழைகளின் வாழ்வாதாரங்களை உயர்த்தும் உன்னத பணிகளுக்கு இது போல் உள்ள மன்றங்கள் முன்னுதாரணமாய் இருப்பதாகக் கோடிட்டு காட்டிய அவர் அபூதபீ மன்றம் ஒற்றுமையாய் இன்னும் பல சேவைகள் செய்திட அன்போடு கேட்டுக்கொண்டார்.

சிறப்பழைப்பாளர் VSM அபூபக்கர் அவர்களின் உரை :

பொதுக்குழுவின் மற்றொரு சிறப்புஅழைப்பாளரான தோஷிபா நிறுவனத்தின் பொது மேலாளர் VSM அபூபக்கர் தமது கருத்துரையில் மன்றங்களை நல்ல முறையில் நெறிப்படுத்தி தேவை உள்ளவர்களை இனம் கண்டு சேவைகள் செய்வதின் மூலம் இறையருள் சூழும் எனவும்,வெளிநாட்டில் வாழும் நம் பிள்ளைகளின் தமிழ்மொழிப்பற்று என்றும் குறையாமல் ஊருக்கு விடுமுறையில் செல்கையில் ஊரில் உள்ளவர்கள் மூலம் தமிழ் கற்பிக்க வழி செய்வது மிக அவசியம் எனக்கூறிய அவர் அபுதாபி மன்றத்தின் செயல்பாடுகளை பாராட்டி இரத்தின சுருக்க உரை தந்தார். 

சிறப்பு விருந்தினர் MJ இக்பால் அவர்களின் உரை :

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தோஷிபா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் MJ இக்பால் அவர்கள் கலந்து கொண்டு உற்சாகப் படுத்தினார்கள் அவர்களது சிறப்புரையிலிருந்து சில பகுதிகள்...

"காயல் மாநகரை எனது இரண்டாம் தாயகமாகக் கருதுகிறேன். 

காயல் மாநகரை நேசிக்கிறேன் . காயல்பட்டணத்தின் வரலாற்றுத் தொன்மையை, பழமையை, ஒற்றுமையை, கூட்டுக் குடும்ப கட்டமைப்பைக் கலாச்சாரத்தை மிகவும் நேசிக்கிறேன். 

காயல் மாநகர் பல அறிவு ஜீவிகளை, சமூக சேவகர்களை, நல்லோர்களை உருவாக்கித் தந்த ஊர். 

உங்களுக்கும் பட்கலுக்கும் பொதுவான நெருங்கிய வரலாற்றுத் தொடர்பும் நெருக்கமும் இருப்பதை நானறிவேன். பட்கல்வாசிகள் தங்கள் விடா முயற்சியால் பல என்ஜினியரிங் கல்லூரிகளை மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியது போல், எனதருமை காயல்வாசிகளும் உருவாக்கிட வேண்டும். 

உங்கள் ஊரை, உங்கள் ஊரின் நிறுவனங்களை, KMT மருத்துவமனையை, உங்கள் கல்வி நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். அடுத்த தலைமுறைக்கு ஏற்றவாறு நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும்.அபூதபீ காயல் நல மன்றத்தின் பணிகளை வெகுவாகப் பாராட்டுகிறேன். எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் ஆருயிர் நண்பர் VSM அபூபக்கர் எங்கள் தோஷிபா நிறுவனத்தின் முதுகெலும்பைப் போன்றவர் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு  காயல் மண்ணின் மைந்தர்களின் பங்களிப்பு மறக்க முடியாதது . SAC ஹமீது மற்றும்மன்றத்தின் தலைவர் V.S.T. ஷேக்னா லெப்பை அவர்களும் வாய்ப்பு தேடி வரும் காயல் வாசிகளுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர் கண்டிப்பாக அதை ஏற்று காயலர்களை எங்கள் நிறுவனம் தொடர்ந்து ஆதரிக்கும் என உறுதியளிக்கிறேன் என்ற உத்திரவாதத்தைத் தந்து உரைக்குத் திரையிட்டு விடைபெற்றார். 

டாக்டர் H.M. ஹமீத் யாசிர் அவர்கள் Generic Medical Store பற்றி உரை :

டாக்டர் H.M. ஹமீத் யாசிர் மத்திய அரசின் திட்டங்களின் ஒன்றான ஏழை எளிய மக்கள் பயனடையும் பொருட்டு நமது நகரில் ஷிஃபா ஒருங்கிணைப்பில் செயல்படும் மிகவும் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் Generic Medical Store பற்றி விளக்கினார்..

உறுப்பினர்கள் அறிமுகம் :

புதியதாய் வேலைவாய்ப்புக்களை தேடி அபூதபீ வந்திருக்கும் சகோதரர்கள் தங்களை பற்றிய சுயஅறிமுகம் செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

நடப்பு நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் :

நடப்பு நிர்வாகம் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போதுள்ள நிர்வாகம் மீண்டும் இரண்டு ஆண்டுகள் நிர்வகிக்க பொதுக்குழு உறுப்பினர்களின் ஒருமித்த அங்கீகாரம் "அல்லாஹ் அக்பர் " என முழங்கி ஒப்புதல் அளித்தனர்.

காயல் களரி சாப்பாடு :

மதிய உணவாகக் காயல் பாரம்பரியமிக்க சுவைமிகு நெய்ச்சோறு,களறி கறி, கத்தரிக்கா மாங்கா பரிமாறப்பட்டது. இச்சுவைமிக்க களரி சாப்பாடு அபூதபீ யில் தயாரிக்க போதிய வசதிகள் இல்லாத நிலையில் துபாய் காயல் சமையல் குழும வல்லுநர்கள் சிறப்புறத் தயார் செய்திருந்தனர் பல சிரமம் களுக்கு மத்தியில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் இஷாக் ஆலிம் மஹ்லரி தலைமையிலான உணவு கமிட்டியினர் மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர். சுவைமார களரி சாப்பாடு தந்தமைக்கு உளமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்றனர். களரி சாப்பாடு உடன் மன்றத்தின் தலைவர் V.S.T. ஷேக்னா லெப்பை தம் துணைவியார் வீட்டிலிருந்த தயாரித்த தந்த சிறப்பான சுவையான பால்கோவா இனிப்பும் பரிமாறப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.

பெண்கள்/சிறுமியருக்கான போட்டி :

பெண்கள் மற்றும் சிறுமியர்க்கான விளையாட்டுப் போட்டிகள் பிரத்தியேகமாக நடந்தேறியது. இந்தப் போட்டிகளை மன்றத்தின் தலைவர் V.S.T. ஷேக்னா லெப்பை துணைவியார் ஜைனப் ஷேக்னா அவர்கள் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடந்தேறியது.
 
சிறுவர்/பெரியவர் போட்டிகள் :

சிறுவர்களுக்கு Lemon & Spoon, Running race, Balloon Fighting,, sweet biting ஆகிய போட்டிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.பூங்காவில் சிறுவர்/பெரியவர்களின் Sack Race ஆரவாரத்துடன் ஆரம்பமானது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் போட்டிகளில் கலந்துகொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் செயற்குழு உறுப்பினர் சகோ. ஷம்சுதீன், அப்துல் காதர் (பாதுல் அஷ்ஹாப்,டாக்டர் செய்து அஹ்மத், டாக்டர் H.M. ஹமீத் யாசிர் ஆகியோர் தம்மை ஈடுபடுத்திச் சிறப்பாக செய்திருந்தனர். 

வினாடி-வினா போட்டி:

அஸர் தொழுகைக்குப் பின் அழகிய வினாடி-வினா போட்டி நடைபெற்றது. 10 நபர்கள் கொண்ட நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டு இஸ்லாமிய, மருத்துவ மற்றும் பொதுஅறிவு ஆகிய மூன்று தலைப்புகளில் முறையே ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ(இஸ்லாம்) டாக்டர் செய்து அஹ்மத் (மருத்துவம்) காயல் வினாடி வினா வல்லுநர் L.T.இப்ராஹிம் பொதுஅறிவுக்கான தலைப்புகளில் சிறப்பாகச் செய்திருந்தனர் .விறுவிறுப்பாக நடந்தவினாடி-வினா போட்டியின் நிறைவில் அபூதபீ காயல் நல மன்றத்தின் பொருளாளர் ஹுசைன் நூருதீன் தலைமையிலான அணி முதற்பரிசையும் ஜனாப் நூஹு சாஹிப் காக்கா தலைமையிலான அணி இரண்டாவது பரிசையும் பெற்றன. 

பரிசளிப்பு விழா : 

போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கான பரிசளிப்பு விழா தனியாக பெண்கள் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னிலை வகித்த மன்ற நிர்வாகிகள் மற்றும் மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தனர்.

நன்றியுரை : 

இறுதியாக மன்றத்தின் மக்கள் தொடர்பாளர் A.R. ரிஃபாய் அவர்கள், இந்த இனிய பொதுக்குழு கூட்டம் சீரிய முறையில் நடைபெற அருள்புரிந்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு புகழை சார்த்திவிட்டு பின்னர் சிறப்பு விருந்தினர்கள், இந்நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்தேற உழைத்த மன்றத்து உறுப்பினர்கள், துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்கள், கலந்து கொண்ட மன்ற உறுப்பினர்களின்  குடும்பத்தார்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து பாராட்டுக்களுடன் நிறைவு செய்தார்.

துஆ :

ஹாபிழ் முத்து அஹ்மத் அவர்கள் துஆ ஓத, கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்! 

பொதுக்குழுக் கூட்டத்தின் அனைத்து நிகழ்வுகளையும்https://photos.app.goo.gl/fOr46V9ShB5RKzuB2 என்ற இணைப்பில் சொடுக்கி, படத்தொகுப்பாகக் காணலாம். 

அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக... 

தகவல் & செய்தியாக்கம் : 
A.R.ரிஃபாய் 
(மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர்)
 
படங்கள் : 
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத் 
(துணைத் தலைவர்)
25 Nov 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top