adsதமிழக கல்வித்துறை இணை இயக்குனர் இக்ராஃ  அலுவலகம் வருகை! இக்ராஃவின் சேவைகளறிந்து பெருமிதம்!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
தமிழக அரசின் கல்வித் துறை இணை இயக்குனர் இக்ராஃ அலுவலகம் விஜயம் செய்துள்ளார். இது குறித்து இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :    

தமிழக அரசின் கல்வித் துறை இணை இயக்குனரான திரு. பொன்குமார் அவர்கள் கடந்த 16-01-2017 திங்கள் கிழமையன்று நகரில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தார். அச்சமயம் நகரில் பல்வேறு கல்விப்பணிகளாற்றி வரும் இக்ராஃ அலுவலகத்திற்கும் அவர் அழைக்கப்பட்டிருந்தார்.அழைப்பை அன்புடன் ஏற்றுக்கொண்ட அவர் அன்று   மாலை 04:30 மணியளவில் இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.அவருடன் ஆசிரியர் அப்துர் ரஸாக் மற்றும் துளிர் ஷேக்னா லெப்பை ஆகியோரும் வந்திருந்தனர்..

இக்ராஃ  சார்பில் செயலாளர் என்.எஸ்.இ .மஹ்மூது, பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் ,நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது, செயற்குழு மூத்த உறுப்பினர்களான ஹாஜி டீ.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர், ஹாஜி ஏ.ஆர்.முஹம்மது இக்பால், ஹாஜி எம்.ஐ.மெஹர் அலி, ஹாஜி.எம்.ஏ.எஸ்.ஜரூக் ஆகியோர் அவரை வரவேற்றனர்.
 
இக்ராஃவின் ஆரம்ப கால செயலாளரும், தற்போதைய நிர்வாகியுமான ஏ.தர்வேஷ் முஹம்மது, ''காயலில் கல்லாமை இல்லாமை (KAYAL LITERACY VISION)'' எனும் முழக்கத்துடன் 11 ஆண்டுகளுக்கு முன் இக்ராஃ கல்விச் சங்கம் துவங்கப்பட்ட விபரங்களையும், அதன் நோக்கங்கள், திட்டங்கள் குறித்தும், இதுவரை அது ஆற்றியுள்ள சேவைகளில் முக்கியமானவற்றையும் சுருக்கமாக எடுத்துரைத்தார். அவற்றில்,

>>> IQRA Educational Scholarship திட்டத்தின் கீழ் இதுவரை 706 ஏழை மாணவ- மாணவியருக்கு ரூபாய் 90 இலட்சம் அளவுக்கு கல்வி உதவித்தொகை  வழங்கப்பட்டுள்ளது.

>>> அமைப்பின் துவக்கம் முதல் 9 ஆண்டுகளாக திறமை மிகு ஆசிரியர்களைக் கொண்டு நகரில் பயின்ற பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அரசு  பொதுத் தேர்வை முன்னிட்டு கல்வி சிறப்பு வழிகாட்டல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இது கேபிள் டிவி மூலம் நேரலையாகவும் (Live),  பதிவு (Recording) செய்யப்பட்டும்  ஒளிபரப்பப்பட்டது.
 
>>> தேர்வு காலத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ - மாணவியருக்கும் ''அரசுப்பொதுத்தேர்வை வெற்றிகரமாக எதிர் கொள்வது எப்படி?'' என்ற தலைப்பில் தேர்வுக்கான தயாரிப்புகள் குறித்தும்,தேர்வு அறையில் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் துறை சார்ந்த வல்லுனர்களின் பயனுள்ள ஆலோசனைகளை பிரசுரமாக அச்சடித்து வழங்கப்படுகிறது.  

>>> பன்னிரெண்டாம் வகுப்பு அரசு  பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல்மாணவராக சாதனை புரிந்த மாணவ-மாணவியரை இங்கு வரவழைத்து, உள்ளூர் மாணவ- மாணவியருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியும், மாநில அளவிலும்,மாவட்ட அளவிலும்,நகரளவிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியரையும் கவுரவிக்கும் வகையில் பரிசளித்து ஊக்குவிக்கும் நிகழ்ச்சி கடந்த 11 ஆண்டுகளாக  நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் நகர பள்ளிகளுக்கிடையில் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்திடும் வகையில் சாதனை புரிந்த சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றன.இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறை துணைத்தலைவர், உயர்நீதி மன்ற நீதிபதி, மற்றும் மத்திய, மாநில அரசின் பல்வேறு உயர் பதவியில் உள்ள IAS  அதிகாரிகள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, சாதனை புரிந்த மாணவ- மாணவியரை பாராட்டியும், பரிசளித்தும்,அவர்கள்தம் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியும் நிகழ்ச்சிகளை சிறப்பித்துள்ளனர்.
 
>>> மாணவர்களின் அறிவுத்திறனை வளர்த்திடும் பொருட்டு உள்ளூர் பள்ளிகளுக்கிடையிலான வினாடி- வினா  போட்டி (Inter School Quiz Contest) வருடம் தோறும் நடத்தப்படுகிறது.

>>> மாணவ - மாணவியரின் ஆங்கிலப் பேச்சுத்திறமையை வளர்த்திடவும், எதிர்காலத்தில் நல்ல பணிகளைப் பெற்றிட ஆங்கிலம் பேசத்தெரியாமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதனை கருத்தில் கொண்டும் பள்ளிகளின் கோடை விடுமுறைக்காலத்தில் ''Summer Spoken English Program'' நடத்தப்பட்டு வருகிறது.

>>>  அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் கல்வி உதவித்தொகை குறித்து மாணவ மாணவியருக்கு வழிகாட்டப்பட்டு வருகிறது.

>>>    உயர்கல்வி குறித்தும், அதற்கு கிடைக்கும் scholarship குறித்தும் வழிகாட்டு நிகழ்ச்சிகள் நகரங்களில் நடத்தப்படுவது போன்று இங்கும் நடத்தப்பட்டு வருகிறது.    

>>>  மத்திய மாநில அரசுகளின் வேலை வாய்ப்புகள் மற்றும் ஆட்சிப் படிப்புகள்  ( IAS / IPS / IFS / IRS & &TNPSC ) குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.சமீபத்தில் நடத்தப்பட்ட இத்தகையை நிகழ்ச்சியொன்றில் ஒரு மாணவர் IAS பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கான முழுப்பொறுப்பும் இக்ராஃவால் ஏற்கப்பட்டு அந்த மாணவர் பயிற்சி பெற்று வருகிறார்.
 
>>> சமீபத்தில் ''செதுக்கும் செம்மல்கள்'' என்ற தலைப்பில் மேனிலைப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், ''தடைகளைத் தாண்டி...'' என்ற தலைப்பில் பெற்றோர்களுக்குமான கருத்தரங்கம் (கவுன்சிலிங்) அது சார்ந்த நிபுணரால் நடத்தப்பட்டுள்ளது.

>>> மாணவ- மாணவியரின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் பொருட்டும், ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து கலந்தாலோசித்து அதற்கான தீர்வை கண்டிடும் பொருட்டும் நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் அவ்வப்போது நடத்தப்படுகிறது.

>>> ஏழை - எளிய மாணவ- மாணவியருக்கு பள்ளிச் சீருடைகள் இலவசமாக வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

>>> கடந்த இரண்டாண்டுகளாக, ''SCHOOL WELFARE PROJECT'' என்றொரு திட்டத்தை உருவாக்கி, இதன்மூலம் புறநகர் உள்ளிட்ட பள்ளிகளுக்கும், மாணவ- மாணவியருக்கும் தேவையான  பொருட்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக Water Filters, Water Tank, Students Bench /  Desk, Uniforms , Notes, Food Plates, Tumbler, 32 inch TV, Fans, Teachers Chairs and  Tables ஆகியவை அளிக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்புக் காரணங்களுக்காக பள்ளி தலைமையாசிரியரின் கோரிக்கையை ஏற்று இரு பள்ளிகளின் சுற்றுச் சுவர் (Compound Wall) உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது.பல்வேறு அமைப்புகள்  மற்றும் கல்வி ஆர்வலர்கள் உதவியுடன் இதுவரை ரூபாய் 3,90,000 அளவுக்கு இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறு விளக்கிய நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது,  எதிர்காலத்தில் மாணவ சமுதாயத்தை சிறந்த முறையில் செதுக்கி உருவாக்கிடும் வகையில் அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் அத்துறை சார் வல்லுநர்களைக் கொண்டு சிறந்ததோர் பயிலரங்கம் நடத்திட திட்டமுள்ளதாகவும்,இதற்கும், நாங்கள் மேற்கொள்ளும் இது போன்ற நிகழ்ச்சிகள் பயனுள்ளதாக அமைந்திடவும் உங்களைப் போன்ற கல்வித்துறை உயரதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு தேவையெனவும், இது போன்ற நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து சிறப்பிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.இதற்கு பதிலளித்த இணை இயக்குனர், கல்விசார் நிகழ்ச்சிகள் என்பதால் தாம் கண்டிப்பாக கலந்து கொள்வதாக கூறினார்.

இக்ராஃவின் கல்விச் சேவைகளை கேட்டறிந்த பின், இக்ராஃ மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களையும், கல்வி நிகழ்ச்சிகளின் புகைப்படங்களையும், நிகழ்ச்சிகள் குறித்த பிரசுரங்களையும்  பார்வையிட்ட அவர் மிகவும் மகிழ்ந்து, ''அனைத்து  சமூகத்தினருக்கும் கல்விச் சேவையாற்றி வருவதைப் பார்க்கும் போது இந்த அமைப்பின் உயர்ந்த நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.  நாங்களாவது ஊதியம் பெற்றுக் கொண்டு செயலாற்றுகிறோம்.ஆனால் நீங்கள் யாவரும் பொதுமக்களின் நலன் நாடி எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் இவ்வளவு ஏராளமான கல்விச் சேவைகளாற்றி வருகிறீர்களே. உங்களனைவர்களையும் பாராட்டியே ஆக வேண்டும் என்று கூறியவர், இந்த அமைப்பின் மூலம் IAS பயிற்சிக்கு மாணவரை தேர்தெடுத்து பயில வைத்திருப்பது சந்தோசப்பட வேண்டிய விஷயம்.  IAS / IPS / TNPSC போன்ற அரசின் ஆட்சிப் படிப்புகள் மற்றும் அரசுப் பணிகளில் நீங்கள் கவனம் செலுத்த முற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. காரணம் உங்களிடம் பெரும் பணமிருக்கலாம், கோடீஸ்வரர்கள் இருக்கலாம், பல நிறுவனங்கள் இருக்கலாம், பல நாடுகளிலும் பல நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றலாம்.ஆனால் அரசுப் பணிகளில், உயர்பதவிகளில், அதிகார மையத்தில் இருப்பதற்கு இவைகள் இணையாகாது. இக்காலத்தில் இது மிகவும் அவசியம்'' என்று கூறிய அவர் தனது வாழ்வினின்றும், தனது அனுபவங்களினின்றும் பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினார். எனவே இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
 
மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கு  அத்துறை சார் வல்லுநர்களைக் கொண்டு சிறந்ததோர் பயிலரங்கம் நடத்திட திட்டமுள்ளதாக நீங்கள் கூறியது வரவேற்கத்தக்கது.இது துவக்கப்பள்ளிகளின் ஆசிரியர்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இக்காலத்தில் இது மிகவும் அத்தியாவசியமாக  உள்ளது.அத்துடன் மாணவர்களுக்கும் உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானதாகும். தற்போது பயிலும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட சில படிப்புகளை பற்றி மட்டுமே தெரிகிறது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளது. அது குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று கூறிய அவர்,இது குறித்து தாம் எழுதி வெளியிட்டுள்ள பல நூல்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

அடுத்து ''அரசுப்பொதுத்தேர்வை வெற்றிகரமாக எதிர் கொள்வது எப்படி?'' என்ற தலைப்பில் தேர்வுக்கான தயாரிப்புகள் குறித்தும்,தேர்வு அறையில் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் துறை சார்ந்த வல்லுனர்களின் பயனுள்ள ஆலோசனைகளை பிரசுரமாக அச்சடித்து மாணவ -மாணவியருக்கு வழங்கப்படுவது அருமையான சேவை. இதனை இந்த ஊர் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி கூடுதலாக ஒரு  25,000 பிரதிகள் உங்கள் அமைப்பின் சார்பில் அச்சடித்துத் தந்தால் பல்வேறு ஊர்களில் பயிலும் மாணவ- மாணவியருக்கும் வழங்க முடியுமே என்றார். இது குறித்து பரிசீலிப்பதாக இக்ராஃ நிர்வாகி தெரிவித்தார்.

மேலும் இணை இயக்குனர் இக்ராஃவுக்கு வருவதை உறுதி செய்ததும், முற்கூட்டியே இக்ராஃ நிர்வாகியும், பொருளாளரும் பள்ளிகளுக்குச் சென்று தலைமையாசிரியர்களை சந்தித்து பள்ளிகளின் சார்பில் கோரிக்கைகளோ அல்லது தேவைகளோ உள்ளதா என்பது குறித்து ஆலோசனை செய்து வந்தனர். அதனடிப்படையில் பள்ளிகளுக்குத் தேவையான சிலவற்றை இணை இயக்குனரிடம் கோரிகையாக வைக்கப்பட்டது.அப்போது கருத்து தெரிவித்த அவர் அது குறித்து சில ஆலோசனைகள் வழங்கினார்.அத்துடன் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ-மாணவியர் அரசு பொதுத் தேர்வு எழுதும் மையங்களில் சில சமயம் கலந்து அமர்ந்து தேர்வு எழுதக் கூடிய நிலை காணப்படுவதாகவும், Co education அல்லாமல் தனித்தனிப் பள்ளிகளில் பயின்று பழகிய மாணவ - மாணவியர் தேர்வு மையங்களில் இத்தகைய சூழ்நிலையால் சங்கடத்தில் பதற்றப்பட்டு விடுவதாகவும், இதனை தவிர்க்கும் வகையில் ஏதேனும் ஏற்பாடுகள் செய்திட வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதற்கும் விளக்கமளித்தார்.
 
தாம் கல்வித்துறையின் ஒரு உயரதிகாரி என்பதையும் தாண்டி மிகவும் சகஜமாக இக்ராஃவின் மூத்த உறுப்பினர்களுடன் இணை இயக்குனர் நீண்ட நேரம் கலந்துரையாடியது, கருத்துக்களை பரிமாறிக்கொண்டது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.இறுதியில் இக்ராஃ கல்விச் சங்கத்தின் விருந்தினர் பதிவேட்டில், ''இக்ராஃவின் சேவைகளுக்கு பாராட்டு தெரிவித்தும், மென்மேலும் பணிகள் சிறக்க வாழ்த்து தெரிவித்தும்'' எழுதி விட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றார்.

இக்ராஃவின் அழைப்பையேற்று நேரம் ஒதுக்கி அலுவலகத்திற்கு வருகை தந்த கல்வித்துறை இணை இயக்குனர் திரு. பொன்குமார் அவர்களுக்கு இக்ராஃ நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.அத்துடன் இதற்கு ஏற்பாடு செய்த ஆசிரியர் அப்துர்  ரஸாக்  அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப் பட்டது. 

இவ்வாறு இக்ராஃ  செயலர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

தகவல் :

A.தர்வேஷ் முஹம்மது 
நிர்வாகி,
இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம். 
21 Feb 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top