ஆறுமுகநேரி திமுக நகர செயலாளர் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி கீழ நவல்லடிவிளையைச் சேர்ந்தவர் முத்துராமகிருஷ்ணன் மகன் சுரேஷ் (40). இவருக்கு திருமணமாகி மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் ஆறுமுகநேரி நகர திமுக செயலாளராக உள்ளார். இவர் மீது 32 வழக்குகள் உள்ளன. இதில், 5கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. 4முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தவர். தீவிர கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவர் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியின் தீவிர ஆதரவாளர் ஆவார். நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தனது மனைவியுடன் ஆறுமுகநேரி சென்று பொங்கல் பொருட்களை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது, அவரது வீட்டின் அருகே மறைந்திருந்த 5பேர் கொண்ட கும்பல், சுரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், திருச்செந்தூர் டிஎஸ்பி. கோவிந்தராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்தினர்.
விசாரனையில், சுரேஷின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கடற்கரையாண்டி மகன் சிவக்குமாரிடம் தகராறு செய்ததால் இக்கொலை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆறுமுகநேரி முத்தாரம்மன் கோவிலில் சுரேஷ் தலைவராக உள்ளார். இந்த கோவிலை நிர்வகிப்பது சம்பந்தமாக சுரேஷுக்கும், சிவக்குமாருக்கும் ஏற்பட்ட தகராறில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனராம்.
இதுதொடர்பாக, சிவக்குமார் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி. ஆகியோருக்கும் மனு அளித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும், சுரேஷ் போதையில் சிவக்குமார் குடுமபத்தினரை தரைக்குறைவாக பேசி வந்தாரம். இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் மற்றும் அவரது அண்ணன் முருகேசன், முத்து ராமகிருஷ்ணன், இவரது மனைவி பட்டுக்கனி, தாயார் சிகாமணியம்மாள் ஆகிய 5பேரும் இக்கொலையை செய்ததாக தெரியவந்தது.
இதையொட்டி முருகேசனை தவிர 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் ஆறுமுகநேரியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : TutyOnline
" 32 வழக்குகள் உள்ளன. இதில், 5கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. 4முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார் "
சூப்பர் ப்ரோபைல். ஒரு நகர செயலாளர் ஆவதற்கு இவ்வளவு தகுதிகள் வேண்டுமா..!!
சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்